Friday, August 26, 2016

கார்த்திகை!


வழுவழுத்த, எண்ணைபூசிய கையால்
துள்ளித் திமிர்வதை பிடிக்கையில்
நழுவிக்கொண்டோடும் மீனை போல
அந்திச்சூரியன்- சிறிது சிறிதாய்
வழுக்கி விழுகின்ற கார்த்திகைத் திருமாலை!


கடைசிப் பிடியும் சருக்கிப்போக...இந்த வழுவழுத்த
புவியில், சூரியச் சுண்டுவிரல் கீரல் விழ...
ஒன்று,இரண்டு,மூன்றாய் முளைக்கலாயின...
சின்ன-சின்ன பகலவன்கள்!
நான்காவது சூரியக் குளியில், நீ, திரியிடுகிறாய்...இப்போது!

கூடிப் பிரிந்து, ஆடி களித்து, கலகலத்து,
கதை பேசி, பின்...காதோடு கொஞ்சம் அந்தரங்கம்
புழங்கும் தேவதைகளின் அந்தபுர தோழிகளோ
உன் வலக்கை இடமிருக்கும் வளையல்கள்?!
திரிக்கையிலும்,ஊற்றுகையிலும்,ஏற்றுகையிலும் சலசலப்பு!

யசோதை சீலைத்தலைப்பை விடாது பிடித்து
அவள் எங்கு வந்தாலும் வால்பிடிக்கும் சின்ன கண்ணனோ...
அந்தத் தங்கக் கால்களை வளைத்து வாஞ்சையாய்
பிடித்திருக்கும் வெள்ளிப் பிள்ளைகள்?!
நீ நடக்கையிலெல்லாம் ஒரே சினுங்கல்களடி!

நீ உதிக்க விட்ட விளக்குகளால்
பரவிக் கிடக்கும் ஒளியை உருக்கி,
அள்ளி-அள்ளி தெளித்துன் முகம் கழுவிக் கொண்டாயோ?!
எஞ்சிய சுடர்த் துளிகள் மெல்ல வழிந்து
தரையில் சொட்டும் ஒலி வளர்ந்து...
வீடெல்லாம் பண்டைத் தமிழ் யாழிசை ஒலிக்குதடி!

பச்சை பட்டுடுத்தி, கற்றை குழல் செர்த்து முடிந்த
முழு நிலவே...கொஞ்சம் எனக்காக அத்துளிகளை
குழலிசைக்க செய்வாயா?
செய்தாலும் நீ மறுத்தாலும்
வருத்தமில்லை...போ!
கொல்வதும் எனைக் கொள்வதும்
இனியுன் விருப்பம்..போ!

-ஆறு

உன்னை போக விடாமல்.


வெகு நேரம் ஆகியிருக்க கூடும்...
புதிதாய் சிறகு முளைத்து,
புத்துணர்வோடு சிறகடிக்கும்
சிட்டு குருவி போல நீ,
கையசைத்து பேச ஆறம்பித்து!
அழகாய் சிறகடித்தாலும்
ரசிக்க எவரும் இல்லை என்று,
சுவாரஸ்யம் இழந்த குருவி....
உற்று முறைத்தது!
நான் என்ன செய்ய?!
என்ன நீ பேசுகிறாய் என்பதை விட,
'பேசுவது நீ'
என்பதை கவனத்தோடு ரசிப்பதிலேயே
என் கவனம் முழுதும் செலவாகிறது!
பரிதபமாய் கவனிப்பவன் பொல
தலையசைக்கதுவங்கினேன்.
நீயும் ஆசிரியை போல
விடாமல் தொடர்ந்தாய்!

நீ பேசி முடித்த பின்னரும்,
தலையசைப்பது
மீதம் இருந்ததை உணர்ந்து...
அடிக்க வந்த உன்னடமிருந்து விலகி,
அருகிலிருந்த
குங்குசிமிழிலிருந்து ஒரு துளியெடுத்து
உன் நெற்றியில் இட்டதும்;
அது முத்தமாய் மாறியது!

வெட்கத்துடன்
செய்வதன்று தெரியாமல்
வீட்டுக்கு வெளியில் வந்தாய்.
வெளியில் இருக்கும் சூரியன்
நேரம் தவறி வந்தோமோ என்று
மேற்கில் மறைய,
வின் மீன் கூட்டம் முளைத்து,
விட்டு விட்டு புன்னகைத்து
உன்னை அழைக்கிறது
வானிற்கு!

நிலவே...
உன்னை போக விடாமல்,
குழந்தையாய்
அடம் பிடிக்கிறேன்!

-ஆறு

உலகங்கள் உறைந்தன!



ஆணாய் பிறந்தவனெல்லாம்
காத்திருக்க தான் வேணும்!
வந்து சேர்ந்தாள்...
முடிவில் முடித்து வைத்தாள்,
ஆயிரம் அலைகளின்
அரை மணி அரும்பாட்டை.
அருகமர்ந்த அந்த 'சிறை' நொடியில்
தொப்பலாய் நனைத்தாள் எனை!

'அடடா சீக்கிரம் வந்து
காரியம் கெடுத்தேனோ?!
கயல் விழிகளும்,
கரிசல் கூந்தல்களும்
எத்தனை கடந்தது?!
எத்தனை கவர்ந்தது?!'
விரல் பினைத்து பிடித்திருக்க,
மடிந்து-மேலிருந்த கால் முட்டிகளிரண்டின் இடையே,
பால் முகம் பதித்தவள் விளையாட்டாய் கேட்கவும்...
விரையம் செய்த பொழுதுகளில்
வினோத உலகம் செய்ய முனைந்ததை விவரித்தேன்...
குழந்தை போல!

தனக்கொன்று கேட்டபோது...
சின்ன குரல் இன்னும் சினுங்கியது.
பொய் வலி போக்க தலைமேல்
பொன் விரல்கள் விரைய,
செந்நாக்கு முன் எழுப்பி
இன்னும் புதைத்துக் கொண்டாள் சிரத்தை,
'நமக்கு தானடி மடச்சி' என, செல்லக் கொட்டொன்று
கிடத்தி சொல்லியதும்!

தாயாக தயாரானோம்
புதியதோர் உலகிற்கு.
எழுந்து நின்றவள்
இழுத்து சொருகி கொஞ்சம்
சீலையும், நிறைய என்னையும்
சிறை இட்டாள்!!
சிகை கொண்டை முடிந்தபடி...
'செங்கல்,
தூரிகை,
கலவை
எது வேனும், விரைகிறேன்...
மழைக்கு முன் உலகம் உருவாக்கனும்.'
புறப்பட எத்தனித்தவளை
கரம்பட பற்றியிழுத்து இருத்தி
சமன் செய்தேன்
எனை சிறையிட்ட கணக்கை.
'நம் சிந்தனை மட்டும் போதுமடி,
உணர்ச்சி சரவெடி!!' என்றபடி
கொஞ்சம் நெருங்கப் பார்த்தேன்...
நொறுங்க குடுத்தாள் பதில்-
"முதல்ல உலகம் செஞ்சு தா!!"

இரும்பு இயந்திரம் எடுத்தொழித்து
பேரிச்ச மரம் நட்டாச்சு,
இரவு மட்டும் போதுமே...என்றேன்,
'இல்லை... இல்லை உன் தொல்லை தாளாது
இரண்டு சூரியன் வேண்டும்' என புலம்பிப் பதித்தாள்.
மயில் மேனி வியர்த்தால் மலையிலிருந்து
தள்ளி கொன்று விடுவதாய் மிரட்டி,
பின் அனுமதித்தேன் சூரியர்களை!
'சூடு தாங்க மாட்டா, பாவம்!'

முயல்,வயல்
புல்,மயில்
நீர் வீழ்ச்சி, வானவில்,
மான், மீன்
பல வண்ணக் குயில் என
'நிச்சயம் வேனும் பட்டியல்' ஒரு வழியாய் முடிந்தது.
பாம்புக்கெல்லாம் பல்லிளிப்பவள்
பரபரக்கும் கரப்பான் கண்டு
என் மேல் தாவிய நாள் நினைவில்
ரகசிய சலுகை....
'இருந்துக்கோ, அவ கண்ணுல படாம'.

பூக்களுக்கு இரெக்கை தந்து உலவவிட்டதும்
சதா சிலு சிலு சாரல் பொழிய ஏற்பாடு செய்ததும்,
முத்தும் இரத்தினமும் தரை முழுதும் பதித்து விட்டு
நட்சத்திரம் பதில் அவள் தோடுகள் வைக்க முடிவெடுத்ததும்
வானம் செய்வதில் மும்முரமானோம்.
'வானுக்காக குழைத்து வைத்த நீலம்
கடலில் ஏகம் இருக்க,
திட்டு திட்டாய் வெள்ளையடித்து விட்டு
வெண்மேகம் என்கிறாய்.
வீனாக்காதடி, நிலவுக்கு
பின் எதை பூச?!'

சினுங்கல் இரைந்து விட்டு,
பொய் கோபத்தில் உடல்  சிலுப்பி,
"'அல்லி'னா அவ்ளோ இஷ்டம்.
அத நிலவா செஞ்சு தந்தா என்னவாம்?!"

ஆணாய் பிறந்தவனெல்லாம்
தலையாட்டவும் வேணும்!
"காது சிவக்க,
புருவங்கள் நெளித்து,
முத்துப் பற்கள் நடுவே
வார்த்தெடுத்த வார்த்தைகளுக்கு
மறுப்பு சொல்லல் ஆகுமோ?!
சரிடீ...சினுங்காத" என்று
அல்லிப் பொருத்த இடம் தேடிய படி
கழுத்து உயரித்தியதும்
அது நிகழ்ந்தது....
கழுத்தை தீண்டிய வெப்பம்,
அவள் தீஞ்சுவாசம் எனப் புரிவதற்குள்
சிலீரென கழுத்தோடு கட்டுண்டு
கனி இதழ் வைத்தோர் முத்தமிட்டாள்...
எங்கள் உலகங்கள்
நாங்கும் உறைந்தன!!!

-ஆறு

Thursday, August 25, 2016

இரவின் அறிமுகமின்மை

சமூகம் விசித்திரமானது.
சிலிர்த்து மகிழவே சொல்கிறது...
சிப்பிக்குள் சுடர் உறைந்து
நிலா விளைந்தால்...
ஓசைகள் பழுத்து, 
கனி உதித்தால்!

எங்கள் பள்ளியறை மெத்தை ஓரம்
முதற் புலறியில், திடுக்கிட்டு எழுந்த 
அவளின் முதற் வினாடியின் நிஜத்திற்குள்
அன்னியம் மின்னலாய் படர்ந்து,
பின் மறைந்தும்போனது!

அரைகனமே என்றாலும் உள்ளத்தடுமாற்றம்;
உண்மையில் நிலவிற்கு சிப்பி புத்திடம்...
கனி, மரமேறவே துடித்திடும்!
காலமன்றி என் காதல் இதை கைகொள்ளும்!

-ஆறு

ஆள் அடயாளமே மாறி பொய்ட்ட!

"ஆருண்டு தெருயுதா?ஆண்டிபட்டி மாமா'டீ...
போன வருச கொட-திருவிழால
ராட்டினம் எல்லாம் ஏத்தி உட்டானே...மறந்துட்டியாக்கும்?
முட்டாய் எல்லாம் வச்சிருக்கான் டீ...போ மாமாட்ட போ"
என்று எத்தனை சொல்லி பழக்கிவிட முயன்று
என் இடுப்பில் ஏற்றிவிட்டாலும்....
வழுக்கி கொண்டு திமிரும்
மருமகளை நினைவில் இறுக்குகிறது...
ஆறு மாதம் முன்பு
ஆசையாய் வாங்கி-
இழந்து, இளைத்து
இளைத்து இழந்துவிட்ட
எனதிந்த கால்சட்டை!

-ஆறு