சிறையிலிடுவது என்பது, கைதியை உள்ளிட்டு அறை கதவை பூட்டுவதில் மட்டுமே என்று கொள்ளாதீர். கைதியை வெளியே தவிக்க விட்டு அறைக்குள் தாம் சுகித்து கிடப்பதும்- சிறையிலிடுவது தான். இத்தனை இரவுகளாய் சிறை வாசம் தகித்த நிலவொளி, ஒரு உதவி செய்தவனின் கரத்தை ஆசை தீர பற்றியழும் மனிதனை போல, பெருமாள் சாமியின் கனுக் கையிறண்டயும் பற்றி கொண்டது.
பெருமாள் சாமி, சன்னல் கதவை திறந்து விட்டு கொண்டிருந்தார்.
"ஒரே புளுக்கமா இருக்கு. ச்செ ச் ச்சே, இந்த கரண்டு போனா வெளிச்சமும் இல்லாம, புளுக்கத்துலையும் கிடக்கனும்...கொசு கடி வேற ஏதோ இலவச இணைப்பு போல"
சமையலறையிலிருந்து சன்னமான குரலில் பெருமாள் சாமியின் மனைவி,"பாபு என்ன செய்யுறான்னு பாருங்க, இருட்டுல எங்கயையாச்சும் இடுச்சுக்க போறான்."
"பாபு...எங்க டா இருக்க? இருட்டுக்குள்ள என்னத்த செய்யுற?"
"மேட்ச்சு பாத்திட்டு இருந்தேனா...கரண்டு போயிடுச்சு! அப்படியே உக்காந்துட்டேன் பா!"
இருளுக்கென ஒரு குணமுண்டு, பழக பழக மங்கலாய் பொருட்கள் தெரிய ஆரம்பிக்கும், பிறகு நன்றாய் பழகியே விடும். அந்த இரு வெளிச்சத்தின் துணையில் முற்றத்தில் தினசரி நாளிதழ் படிக்க அமரிதிருந்தவர், தன் மகன் இருக்கும் அறைக்குள் மிகவும் கவனமாய் நடக்க துவங்கினார்.
"நீயும் அங்க என்னடி பைங்கிளி செய்யுற?இருட்டுக்ள்ளாற? "
"ஒரு நிமிஷம் இருங்க...அரைகுறையா அறைச்சு கிடக்குற மாவ ஏதாச்சும் தட்டு போட்டு மூடிட்டு வந்திடுறேன்...பல்லி கில்லி விழுந்தாலும் சொல்றதுக்கில்ல!"
"சரி, சரி வா." என்று சொன்னபடி இப்போதெல்லாம் மகனிடம் வந்து இருந்தார்.
"ஏண்டா, ஏதோ ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னு சொல்லிட்டு இருந்த?! ஐனூத்தி என்பது தானே? காலைல மறக்காம அறு நூறா வாங்கிக்கோ!"
"சரிப்பா. ஆனா அறு நூறு இல்ல, அறுனூத்தி இருபது வேனும்!"
"எதுக்குடா?"
"பின்ன, எனக்கு வாங்கி திங்க காசு வேணாமா?!"
"டேய்! அது தான் மிச்சம் 20 இருகுல வழக்கமா அவ்வளவு தான கேப்ப!"
"ஆமா பா...ஆனா, நான் லஞ்சு பீரியடுல தான பீஸ் கட்ட முடியும்! பர்ஸ்டு இண்டர்வெல் அதுக்கு முன்னாடியே வந்திடுமே, அப்போ பசிக்குமே. அஞ்சு ரூபாய் பொருளுக்கு நூறு ரூபாயா நீட்டினா, எதோ சொத்த எழுதி கேட்டாப்புல முறைப்பான். மட்டுமில்லாம, அத்தனை பணத்தையுமா வெளில எல்லத்துக்கும் முன்னாடி எடுக்குறது, ரிஸ்க்கு பா", என்று சொன்ன பாபுவின் குரலில் ஒரு குறும்பு தனம் இழையோடியது!
"வெவரம் டா, எப் புடியும் பீஸ் கட்டினது போக உள்ள இருபது ரூபாய மறந்திடுவோம்...அது போக ஒரு இருபது ரூபாயா!"
"போங்க பா", என்று குழைச்சலோடு மறுமொழி செய்தான்.
இதையெல்லாம் கேட்ட படி நின்றிருந்த பைங்கிளி, தன் மகனுக்கு ஒரு ஷொட்டு வைத்து விட்டு ஆரம்பித்தாள்,"இந்த வயசுலையே எம்புட்டு சூசாசனாமா இருக்குது புள்ள...நீ எல்லாம் வளந்து பெரிய அரசியல் தலைவராகு டா. இப்புடி பேசியே உலக வங்கிட்ட கடன் வாங்கி நிதி நிலமை எல்லாம் சரி செஞ்சுடுவ! ஆள பிறந்த ராசா டா, நீ!" என்று சொல்லி விட்டு தன் கனவனின் ஒப்புதலுக்காய் ஆசையோடு பெருமாள் சாமியை பார்த்தாள். அந்த இருட்டுலையும் அவளின் முகம் பெருமையில் பளிச்சிட்டது!
"போடி...போடி...இவளே! அரசியலுக்கு அனுப்புறாளாம், சின்ன பையன கெடுக்காத...அவன் உறுப்புடட்டும்!"
"அப்புடி என்ன சொல்ல கூடாதத சொல்லிட்டேனாம்!" என்று சலித்து விட்டு, கொஞ்சம் கருகிய முகத்தோடு தொடத்ந்தாள்,"சரி, இப்போதைக்கு கரண்டு வற்ராப்புல தெரில...அரைகுறையா அறைச்சு கிடந்தா நாளைக்கு, கடைல தான் வாங்கனும்...இல்லேனா நீங்க தான் ஆட்டுக்கல்லுல அறைச்சு தரனும்!"
"ஹூம்! வேற வழி, எவன் காலங்கத்தால பைய்ய தூக்கிட்டு ஓடுறது...காசு வேற அழனும்! அறைச்சு தொலையுறேன்!" என்று கடுகடுத்தபடி பெருமாள் சாமி எழுந்து நடந்தார். இப்போது அந்த இருட்டு அவருக்கு பழகிவிட்டது போலும், சற்று சீறாகவே நடந்தார்! நடக்க நடக்க அவரின் குரல் தேய்ந்து கொண்டே இருந்தது, "இதையெல்லாம் தட்டி கேக்க புதுசா யாராச்சும் ஆட்சிக்கு வந்தா தான் உண்டு! ஹூம், எங்க பொறந்திருக்கானோ?"
-ஆறு.