Tuesday, December 13, 2011

காதல் தொக்கு

சினுங்கலிட்டு கொஞ்சும் 
உன் சோம்பல்
இரவுப்படுத்துகிறது 
என் வானை!

பூட்டிய தேன்குழலில்
சூட்டிய முல்லை,
நிலவுபடுத்துகிறது
என் நிலத்தை!

நேத்தய கள்ளாய்
உசுப்பிவிட்டு எனை
பாடாய்படுத்துகிறது
நின் சேலை!

-------------------------------------
வாசனை முத்தம்
பறித்துக் தொடுத்து
முத்தகொத்து நீட்டினால்...
"கையில் தந்து போ" என்கிறாள்!
அவசரமாய் சேலை நெய்ய பழகனும்!
-------------------------------------

பூக்களை
பூக்கவைத்து பூக்கவைத்து
சலித்து விட்டதாம்
வசந்ததிற்கு...
நீ விதையாகிடு, கொடிதோரும்
வசந்தங்களே
பூத்துசெழிக்கட்டும்!

--------------------------------------
குறிஞ்சிப் பூ,
12 வசந்தங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும்
என்பார்களே!
நீ மட்டும் எப்படி,
ஒவ்வொரு தீண்டலுக்கும் பூக்கிறாய்?!


--------------------------------------

அரளிப் பார்வை
அவன் தர,
விஷத்தின் வீரியம்
முறிக்க முயன்று
மடிந்தது ஆடை.

சிறிது சிலிர்த்து
மெலிதாய் சிரித்து,
இன்னும் கேட்டு
மானம் பறித்தது
கெட்ட வெட்கம்.

அவன் விழிக்கொண்டு
துளி துளியாய்
விஷம் உதிர்த்தான்
ஒவ்வொரு துளியும்
ஆகியது அமுது!

-----------------------------
உன்னை போலவே,
உன் நிழர்படமும்,
என்னை மருந்துக்கும்
மதிப்பதாய் இல்லை.
எத்தனை முறை
முத்தம் கேட்டும்,
முறைத்தே பார்க்கிறது,
உன்னை போலவே!

-----------------------------
எப்போது பார்த்தாலும்
வெட்கமும்-விழியுமாக
அலைகிறாயே,
கண்மைப்பூச்சில் வெட்க்கம் குழைத்து
கைப்பையில் ஒளித்து கொள்வாயோ?
வேளை தவராமல் அதையிட்டு எனைக்கொல்வாயோ?

------------------------------
அவள் நெற்றியில் மட்டும்
நிலவு,
சிகப்புடுத்துகிறது!

------------------------------
எனது கண்னை கட்டிவிடாமல்
உன்னை மட்டும் முன் நிருத்தி,
உன் வீட்டு வாண்டுகள் கூட
கேலி செய்கிறதுகள்
நாம் கூடி கண்ணாமூச்சி ஆடுகயில்!

------------------------------
நெஞ்சு பதைக்கிறது,
நாளொருதரம் வெரும்
உன் பிம்பம் விழுங்கும்
நில கண்ணாடிக்கே
சர்க்கரை நோயாமே!!!
அய்யோ நான் செத்தேன்!

------------------------------
விரலிடுக்கில் நிலவு நசித்த
துகள் கொண்டு வரைந்தாலும்
அழகு படுத்த உனக்கு அக்கறை
இருப்பதாய் தெரியவில்லை!
பார்த்து பார்த்து பதம் வைக்கிறாய்
கோலமிடும் நீயே அதை மிதித்திடாமல்,
அட பைத்தியமே.....
பிழையில்லா பிள்ளைத்தமிழ் ஓர் இழப்பல்லவோ?!

-------------------------------
உளவு பார்க்க அனுப்பபட்ட காற்று
கொஞ்சம் திருடிச்சென்று ஒப்படைக்கிறது
சுகவாசத்தை உன் கூந்தலிருந்து....
பொல்லாபூக்களிடம்!

--------------------------------
செடியோடு ஒட்டியிருந்த இலையை
மெல்ல உன் காதில் நுழைத்து
சுகமாய் குடைந்தேன்.
கண்கள் சொருகி,
புருவம் உயர்த்தி,
கூச்சப்புன்னகை விளைத்து
தலைத்திறுப்பினாய்......
"என்னை வைத்து செய்"
என மற்ற இலைகளும் கெஞ்சின !
---------------------------------------

அண்ட வெளியின் நவமணியையோ,
நகை பெட்டியின் நட்சத்திரங்களையோ,
தேடித் திருடி, சொற்களாய் 
நெற்றிப் பொட்டில் சூட்டி விட்டாய்!
உனக்கென்ன?!!!
காணாது போன அந்த வார்த்தைகளுக்காக 
என்னை தேடி வந்த மொழிக் காவலன் 
எனது மொளன கூட்டையல்லவா உடைக்கிறான்...
வர வர தனியே உளருகிறேன்
ஒரு பித்து போல!


-------------------------------------------------------


உன்னை பற்றிய நினைவுகளை
சேமித்து வைக்க இடம் தேடினால் மட்டும்
எப்படித்தான் கையளவு இதயத்தின்
கொள்ளளவு விரிகிறதோ?!
----------------------------------------------------------


நகங்களால் நீ கீறிவிட்ட காயங்களின் மேலே
நீ அப்படிச் செய்த தருணங்களின் நினைவுகளை பூசினால்...
அப்பப்பா....இணையொரு மருந்தில்லையடா!


----------------------------------------------------------


நிலவென்றழைத்தாய்!
நிலவுதான்...
குவித்து வைத்த உன் உள்ளங்கையில்
கன்னம் உரசித் தேய துடிக்கும்,
நிலவு! 


----------------------------------------------------------


நிலவின் வளர்-தேய் சுழர்ச்சி 
மட்டுமே நம்பி நாட்குறித்த 
பண்டை காலத்தில், நல்ல வேளை
நீ பிறக்க வில்லை.
நீ தான் தேய்வதே இல்லயே!


-----------------------------------------------------------


எப்போது திறும்புவாய்...எப்போது திறும்புவாய்

என தலை கீழாய் தொங்கிக் தவமிருந்து,
நீ திறும்பும் விசையில் உன் கண்ணம் உரசும்
தோடுகள் தாம் என் முன்மாதிரிகள்.
"ஓம்.. லோலாக்கு டோல் டப்பி மா!"


------------------------------------------------------------

காவிரிக் கார்வெள்ளம்  
கரையரிக்கும் பொழுதில் ஒதுங்கும் நுரை- அது 
பல கண்ணி-சடை வார் சீப்பில் சிக்கிய 
கன்னியின் முடி!
இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில்- அது
யாரும் கேளாமலே 
ஒரு மயில் போட்ட இறகு!

---------------------------------------
குடித்து விட்டு
'தகிட ததுமி' ஆடலாவேன்
என பீடித்தே பூட்டி வைத்தாயோ
உன் உத( ட்)டுக(ள்)ளை?!
----------------------------------------

உன்னுடைய பழையதொரு வெண் தாவனியையா
வயலில் காகம் விரட்ட கட்டி வைப்பான்
உன் அப்பன்?!
எப்போதோ இந்த உலகை விட்டு
மறைந்து போன 
அன்னப் பறவையின் கடைசி இறகு
இப்போது கிடைத்து விட்டதாய் நம்பி,
அறிவியல் ஆர்வலரெல்லாம்
உன் வயலில் மொய்த்துவிட்டார்களடி!
---------------------------------------

மின்னல் ஒழுகியதை 
மொழுக பூசியாற்போல் 
மெலிதாய் சிரித்துவிடுகிறாய்,
இடியோசை என் இதையத்தில்
மழை வாசம் நம் முற்றத்தில்!
---------------------------------------

புயல் முன்னறியும் கருவி, 
உனை கடக்கையில் எல்லாம் எச்சரித்து ஓலமிடுகிறது!
விழியுருட்டி புயல் திரட்டும் கலை 
ஏன் தான் கற்றாயோ, தோழி?!

---------------------------------------
கைகளுள் மிகாமல் அடங்கும் 
உன் முக வடிவு
கண் இரண்டில் ஒருபோதும்
அடங்கா!
-----------------------------------
கவிதைகளை கர்பமுற்ற, 
தனித்துவிட பட்ட எல்லா இரவுகளிலும், 
எரிந்த உன் நினைவுகளின் 
சாம்பலயே தொட்டு-தொட்டு தின்ன
தேடி அலையாய் அலைகிறது, எழுத்தாணி!
போகட்டும் அதுவும் நன்மைக்கே!
பேறுகாலம் களிந்து, பட்டுவெண் 
காகிதத்தில் இதமாய் சுற்றி
அம்மழளைகளை நீட்டினால்...
யவர் சாடை, யாரை போல்
என்று விவாதிக்க வழியில்லை!
உன் மௌனம் திரண்ட விழியின்,
நாடி பள்ளத்தின், நாசிமுனை பொன்மச்சத்தின்,
இதழோர சிருபனிப்பருவின்
தன்மைகளை தனித் தனியே 
பாகத்திற்கோர் மகள் கண்டு, ஏமாந்து
போகட்டும் கலகமூட்டும் உன தங்கங்கள்!
-------------------------------------------
கோர்க்க வரும் உன் கரங்களை
தட்டி விட்டபடி நான்...
அவைகளை எனை கட்டியனைக்க
நீ மிச்சம் வைப்பாய் என!
--------------------------------------------

மேகம் ததும்பும் நற்தேகம்தனால் போதையுற்று 
கதிதேடி தள்ளாடிவிழும் எனதாவியினை, 
தொழில் மறந்துன் முல்லைச்சுடர் முறுவல், 
தடுத்து, நட்டவெளியில்-நிறுத்தி உறையச்செய்கிறது! 
விட்டுவிடடி என் ஆவியை! இன்றேனும் உன்னடி மோதி 
சுக்கு-நூறாய் நொறுங்கட்டும்... 
-விட்டில், அது, அதற்கெனவே படைக்க பட்டது!

---------------------------------------------

நம்மளது ஒரு பெரிய
கூட்டு குடும்பம்.
எல்லோரும் சாப்பிட்டு போன பின்
எப்போதும் கடைசியில் வரும் எனக்காக,
நீ பத்திர படுத்தி வைக்கும்
பலகாரத்தை போல,
உன்னை எனக்காக இத்தனை நாள்
பத்திர படுத்தி வைத்திருந்தது,
நம் வாழ்கை!
------------------------------------------------

உன் இரு(கிய) மருங்கின் அருகே
அருகி விடுகிறது காலம்.
அருந்து விடுகிறது சோகம்-சொகம்!
ஏதுமற்ற வெற்றுத் திக்கினில் 
விளைந்து துலங்குகிறதென் மோக்ஷம்!


------------------------------------------------
பார்கடலின் அலை வந்து
கணுக்கால் தொடுவதும்... 
பின்னோடுவதுமாய்;
அருகில் முகம் பதித்த உன்
மெல்லிய மூச்சு....
என் கழுத்தில்!

--------------------------------------------------

பேரழகி தான்...ஆனாலும்
கடவுளுக்கும் குறுக்கு புத்தி
தூண்டும் அதி பயங்கரி நீ!

கொள்ளை கொள்ளையாய் கோபம் வந்து
'ஏன்?' என்றாய்!

அரைத்த மஞ்சளை கையளவு அள்ளி
பிள்ளையார் பிடிக்காதே என்றால்
கேட்கிறாயா.

ஒன்றும் புரியதவளாய் முழித்தாய்.

பின்னே, உருவாக்குதலும் தாய்மை
செயல் தானே,
கிடைத்தடா ஒரு சாக்கு
என்று அதை சொல்லி
கல்யானத்துக்கு தயாராகி
நிற்கிறார்
'தாயை போல' தாரம்
தேடும் பிள்ளையார்!
-----------------------------------------------------------------

''எங்காவது கூட்டிப் போ''
என்றாய்.

''திகில் படம்?!'' என்றேன்.

''சரியா போச்சு போ,
ஏன் தான் உன் ரசனை இப்படி போகுது'' என்றாய்.

"என் ரசனைக்கு என்ன கேடு?
ஒவ்வொரு திகில் காட்சியிலும்
மன்சள் விரல் பதிய இருக என் சட்டை பிடித்து
மார்பில் முகம் புதைத்து- 'முடிஞ்சிருச்சா...முடிஞ்சிருச்சானு' கேட்பாயே
அதை ரசிப்பது என்ன மட்டமான ரசனை?!"

"ச்சீ போ..பட பட னு வரும்...
நான் வரலப்பா!"

"உனக்கு தட தடக்கும்
பயத்தில்...
எனக்கும் தான்...
என்ன ஒன்று, 
பயம் தான் இராது!" என்றேன்.
-----------------------------------------------------------------

நம்ம வீட்டு தண்ணீர் 
ஆச்சாராமானது என்றேன்.

'ம்ம் வேற!' என்றாய்
நம்பதவள் போல.

"அசடு...
நீ எழுந்து,
காலையில் அடுப்பை 
பற்ற வைக்கும் 
முன் ஒரு முறை;
மாலையில் அசதி களைய
ஒரு முறை
என்று....
ஒரு நாளில் இரண்டு முறை
குளித்து விடுகிறதே 
நம் வீட்டு 
குழாய் நீர்,
அப்போ அது ஆச்சாரம் இல்லாம
என்னவாம்?" என்றேன்.

"ஏதாது உளரீட்டே இருக்காதீங்க"
என்றாய், லேசாய் என்னைக் கிள்ளி!

------------------------------------------------------------

'குடித்தல் எனும் செயல் அழகை குறைக்காது'
'இமைத்தலில் எல்லாம் நேரம் கரையாது'
'ஒளியை வெல்லும் வேகம் வெட்கத்திடம்'
இன்னும் எத்தனையோ(?!) விசித்திர விதிகள்...
அவள் விழியுலகில்!

--------------------------------------------------------

கன்னமிரண்டயும் தாங்கும் உனது
உள்ளங்கையின் மித வெப்பத்தில்
உருகி... ஜீவ நதியாய் உனது
ரேகைகளுக்குள் ஓடிவிடத் தான்
முயல்கிறேன்.....
மிகச் சிறியவள் தான்....சிந்தாமல்,
முழுவதுமாய் உனது ரேகைக்குள்
பாய்ந்து விட என்னால் முடியும் தான்...
உன் மீதான என் காதல் அப்படி அல்ல!
நான் உருக, என்னோடு பெறுகி வரும்
காதல் வெள்ளம் சிதறி விழுந்து விடலாம்.
அனுமதிக்காதே! நானோ, காதலோ
உன் கை மீறி போக!

----------------------------------------------------------


கை நிறைய உனையள்ளி

அதிலெந்தன் பிம்பம் பார்க்கத்துடித்தேன்.
விரலிடுக்கில் வழிந்து விட்டாய்,
உயிர் திரவம் உலர்த்திவிட்டாய்!
எனது கண்ணீர் துளி
அனாதையாகுமுன்னே
வந்திடு பெண்னே!

-----------------------------------------------------------

இதழ் சுளித்து கொளுத்தி போடுகையிலும்
இதமளிக்கும் விரல் தொடுகையிலும்

சோளியாய் சிரித்து விடுகையிலும்
பொலிவாய் பார்வைகள் கவரி விடுகையிலும்
மிகச்சாதாரணமாய் உடுத்திக் கொள்கையிலும்
முகத்தில் பருக்கள் தாங்குகையிலும்
உலர்ந்து, உடைந்து,நரைத்து போகையிலும்...
இப்படி எல்லா நேரங்களிலும்
அவளின் அழகு, எனது பார்வைக்குள்!
அவளின் வசீகரம், எனது புரிதலுக்குள்!
-------------------------------------------------------------
இந்த துணிகளை போல
உன் மூச்சுச் சூடும் 
ஒரு பொருளாய் இருந்து விட கூடாதா?
ஊருக்கு அவசியமாய் 
கிளம்பையில் இரெண்டை எடுத்து 
துணியோடு துணியாய் மடித்து 
பெட்டியில் போட்டு 
புறப்படலாமே!

---------------------------------------------------------------

மாரிவிற்களுக்கு சிறகுகள் பரிசளிப்பதுமாய்...

குட்டிக் குமிழ்களுக்குள் குடி கொள்வதுமாய்....
நிலாக்களை கொஞ்சி முயற்கூண்டில் வளர்ப்பதுமாய்...
வனதேவதைகள்.
அதிசயங்கள் நிகழ்துவதெல்லாம்,
தட்டுபடாத வனதேவதைகளின் 
ஒட்டுமொத்த குத்தகையே- எனுமென் 
ஆய்வுகளின் அறுதித்தீர்மானத்தை அன்றாடம்
அச்சுறுத்தவே செய்கிறாய் நீ-
கனிந்த மனத்தால் வாஞ்சையை பரப்பி,
தெளிந்த செயலால் வாழ்கையை நிறப்பி!

------------------------------------------------------------------


ஆனயும் பூனயுங்காட்டி, 
மூனுகண்ணே கத சொல்லி மிரட்டி
மம்மு சாப்புட வைக்கும் ஆத்தா போல
வராத தும்மல வம்படியா வரவச்சும்,
இல்லாத இருமல இழுத்துஞ்செருமியும்,
வேலையத்து குறுக்க-நெடுக்க கடந்தும்; 
ஒத்தவாட்டி ஒம் முட்டகண்ணுக்கு
ஒத்த வாய் என்ன நா ஊட்டிவிடுறதுகுள்ள!!! 
எப்பே...நீ அராத்து புள்ள!

ஆனைக்கும் பூனைக்கும் காத்திருக்கல நா
அட நீ கடந்து போகவூம் பாத்திருக்கல
வெறும் ஒம் பேர கேட்டுட்டு பசிச்சு தவிக்குறேன்
ஒன் நெனப்பு வந்துபுட்டா தவிச்சு நிக்குறேன்
தெரிஞ்சுக்கடி...நெசமாவே நா ரொம்ப சமத்து புள்ள!
---------------------------------------------------------------------
நீக்கமற நிறைந்திருந்தும்
புறகண்ணில் படாத
உயிர் காற்றைப் 
போலொரு முத்தக் கூரை 
வேய்ந்து கொடுத்து
அதிலென்னை அமர்த்தி 
வைத்திருந்தாய் போல!!!
இதோ, இந்த தண்ணீரில் மூழ்கிகொண்டு
மூச்சுத் திணரையில்,
நீயின்மை...கன்னத்தில்
அறைந்து உணர்த்துகிறது!
------------------------------------------------------------------
வெட்கம் விசைதறியாடும் தொங்கட்டானுக்கும்
விரகம் வேர்ஊன்றி கிடக்கும் உன் மூக்குத்திக்கும்
தூரம் அதிகமில்லை! 
'விரைவதா? விலகி...நானாய் தரும் வரை 
நடித்து நாணவா?'- விளங்காமல் தவிக்கும் 
உன் இருமுனை காதல் கத்தியால் 
கிழித்து-உண்டது போக மிச்சமிருக்கும் என்னை 
எனக்கு கொடு, போதும்.
அதுவே அதிகம்!

---------------------------------------------------------------------
கெரகமா இல்லியானு சர்ச்சையா கெடக்கும்
ப்ளூட்டோவ கூட படம் புடிச்சி போட்டாய்ங்க புள்ள;
கெரகம் புடிச்ச ஓங்காதல், காயா-பழமா?
கழுத... கருத்துல நின்னு கெரகமாடாத புள்ள!
----------------------------------------------------------------------------
எட்டாக் கிளைகளால் உந்தப்பட்டு
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து உயர்ந்த
பரிணாம கோட்பாட்டையே பரிகசிக்கும் 
உன்னிடம்,
என் வாசல் கடக்கும் உன்னை ரசிக்கும் பொருட்டு
என் வீட்டுச் சுவற்றுக்கும் அப்பால் வளர்ந்து நிற்கும்
பூங்கொடிகளை உதாரணமாய் காட்டினால்....
படுத்துருண்டு சிரிப்பாயோ?!
--------------------------------------------------------------------------

இலையின் நரம்புவழி 
பரவியது நிலவின் முத்துச்சுடர்.
உன் மூச்சில் அதிரும் இலைகள்
ஒளியை உதறுகிறது அத்துவானக் காட்டின்
தரையில்!
வனமெல்லாம் உன் மணம் பெருக்கெடுத்து,
மோதி நிலவுடைத்து நட்சத்திரங்களாய்
வானெல்லாம் சிதறவிடுகிறது!
இதற்காக எல்லாம் தான்
அந்தக் காட்டின் வெள் உவா இரவில்; 
அந்த இரவாய்,
அந்த நிலவாய்,
அந்தக் காடாய், 
என்றுமே நான்.
-ஆறு
----------------------------------------------------------------------------
பக்குவமடைந்தோமென சுய போதனையுடைய
பயமறியா இளங்கன்றுத் துளிகள், 
தொப்புள் கொடி அறுத்துச் சிதறி...
பிரசவித்த மேக நாளங்களில் எல்லாம்
வலிக்கீற்றுகள் மின்னலாய் கிளைந்து
கோர ஒலிகளைக் கடைய...
ஓலங்களை சப்தித்த படி
இல்லா சிறகுகள் கொண்டு பறக்கவே,
தோற்றுப் போன குறைமாதத் துளிகள் யாவும்
மண்தலையில் எதிரொலித்து மீண்டும்
மேகம்புக ஊளையிடும் ஒரு மழைகால மாலையிது!
நிழல் கூந்தலை தரையில் உலர்த்தியபடி
காலணி சூழா நின் மென்குதிங்கால்  மெத்திட்ட 
கர்ப்ப குளிகளில் அகலிகை துளிகளை 
சிசுக்களாக்கி இறகுகளை கிளர்த்திவிட,
வா, கை பிடித்து மிதந்து...
சாம்பலிருந்தும் உயிர் திரிக்கவல்ல
தரைதொடுங்கறுமேக சந்ததியே!
----------------------------------------------------------------
சொட்டு மருந்தளவில் துளித் தேனை
வைத்துகொண்டு இத்தனை இரைச்சலெதற்கு
கண்விழிக்கையில், இந்த காந்தள் மலருக்கு?
நீயெல்லாம் குடம் குடமாய்
அழகை தேக்கி வைத்துகொண்டு
அலட்டி கொள்வதே இல்லையே!
------------------------------------------------

பூமலர்வது இரைச்சலாகவும்
பூவையவள் வளையோசை 
இறைச்செயலாகவும் கேட்டால்
காதல் உன் மேல் ஏறிவிட்டது
என்றுணர்க!

-------------------------------------------------

கண்படாமலிருக்க...
கட்டிகொண்டிருக்கும்
கலசங்களுக்கே தட்டி போட்டு
மறைத்து பார்த்திருகிறோம்!
திறப்பு விழா கண்டபிறகும்
வெட்கமுடுத்தி ஏன் மறைக்கிறாய்
எதுகையயும் மோனையயும்?!

-----------------------------------------------------------

உதடுகள் அழுந்திப் பொருத்த
உடல் சிலிர்த்துப் பிண்ண
ஓரப் பார்வைகளில்...உண்மையில் கொஞ்சம்
கோரப் பார்வைகளில் கண்கள் மல்க,
தேக சூட்டில் பெய்யும்
வேர்க்கை பொழிவை எதிர் பார்த்தோ
உன்னிரு மார் நன் கொடைகளை
கொடையாய் அளித்தாய் இந்த
கலவிப் பொழுதில்?!

----------------------------------------------------------


தொடுவானத்தை பற்றிய
என் கருத்தினை
யாரேனும் கேட்க நேர்ந்தால்:
தொடர்பு எல்லைக்குள்ளாகவே,
எண்களுக்கு பின்னால் 
ஒளிந்து கொள்பவள் 
எண்ணங்களுக்கு பின்னால் 
ஒளிர்ந்து கொல்பவள்
ஒருத்தி இருக்கிறாள்.
அழைக்கவும் முடியாத 
அளிக்கவும் முடியாத
எண்ணுக்கு சொந்தக்காரி.

----------------------------------


வாழ்வின் நீளமெல்லாம் 
நீ சுருக்கி-நீட்டி உதிர்க்கும்
சொற்கள்சார் பக்கவிளைவு தானடி.
நிகழாமல் கடக்கும் நம் சந்திப்பின்
நீண்ட மௌனத்தால்... 
என் ஆயுள் சுருண்டு மரிக்கும், 
காற்றை ஒண்டி குடிக்கும் 
(வெறும்) காயம் கொண்ட பாம்பாய்!

--------------------------------------------------------
பிறந்த பிஞ்சை நெஞ்சோடு 
இருக அணைக்கும் தாய் குரங்கினை
காட்சியாக்குகிறாய்..நெருங்க வரும்
எனக்கு, உன் சீலையை பற்றிக் கொண்டு.
இழந்தால்...பொழிந்தால்...
மேகம் அழகடி பேதையே!

-----------------------------------------------------

"ந்தாரு மாமா! நானாக்கும் த்ரிஷ்டி பொட்டு?!
நீந்தே த்ரிஷ்டி பொட்டு, 
வரமொற இல்லாத ஓம்மட வேட்டி கட்டு"
என ஏகதுக்கும் சிலுப்புகிறாய்!

தீராத வெண்த்துணிக் காட்டின் 
ஓயாதந்த ஒற்றை சலிப்புபூக்களிடையே
மச்சக் கணையாய், வெரும் ஒற்றை மஞ்சக் கறையாய்
கவனமீர்க்க...அடி கிழத்தி...
என்னால் ஆகுமோடி?!
எனைத்தான் த்ரிஷ்டி பொட்டென உயர்த்தி,
சொன்னாலது தகுமோடி?!

--------------------------------

கலி காலமுன்னு நெனச்சானோ
ஆள் வராம 
கல்லா காலியாகி தவிச்சானோ
காவி வேட்டிகள நம்பாம
வாள் முனைக்கு வழியில்லாம
விளம்பரம் ஒன்னு 
சொர்கத்த விவரிச்சு எடுத்தான்...
சொர்னமே உன்ன எனக்கு கொடுத்தான்.

அவ முக தசை வரிகள்'ல திசை முகவரி எழுதி நீட்டலாம்
இன்ன இன்ன பாகத்துல என்ன என்னவோ
ஜகஜாலம் காட்டலாம்...
ஒத்த பருக்கைய தாண்டி சோத்து பானையில
கவனம் எனக்கில்ல பரமா....
சொர்கமேன்னாலும் அது நம்மாள போல வருமா?!  

-------------------------------

"கரி"யில், "கறையடி"யில், 
"நால்வாய்"யில், "பெருமா"வில் 
கொப்பளிக்கும் 
தனித்துவம்- அது
தலைமறையும்- 
இரட்டை எழுத்து "யானை"க்குள்,
எல்லாப் பருமனையும்- யானையின் 
பலகுண பலத்தையும்
தினித்து விடுகிறது 
எண்ணம், ஏனோ!
திடீரென்று, அத்தனை கனமாய்
தோன்றவில்லை யானை!
அழகை குறிக்கும் சொற்களுள்
உனது பெயருக்கு அழுத்தம் அதிகமென
வீரிட்டு பிளீரிடுகிறது துலாபாரம்,
வெறும் எழுத்துக்களாய் 
இளைப்பாறும் பொழுதிலும்!

------------------------------------

காட்டாற்றின் கரை கரைந்துருக
கறிய பெரும்பாறை கனிந்துருள
கவின்மலர்தம் மென் தேகங்கொண்ட
பொல்லா நாணலோ...நளினமேந்தி, விசை பாடி!

அவ்வண்ணமே நறுமகளவள் நாணமுமே!
செம்மண்ணுமே விரைந்தொழுகிய  பெருங்கரை என்ன?
தென்வன்ணமே தான் கொண்ட கடும்பாறை என்ன?- விழுந்தேனடி,
நின் எண்ணமே உதித்தெழும் வெறும் நாணல் இடறி!

நாணலும் நாணமும் போலன்றி 
ஏறு வெயில் முகம் மலர்த்தி 
எழில் சூழும், தளிர்மலர் சூடும் 
ஏந்திழை நேரிழை குழல் விரித்து 
ஏந்தி எனைப்பித்தாய் வைகரைத்தெய்வமே!

-------------------------------------------

மெய் மெழுகும் நெய்யாகி
தீ வளர்த்து ஒழுகுதடி.
முத்தத்தின் மிச்சமாய்...
உன் மூக்குத்தி கல் 
என் தாடையில் பதித்த 
வட்ட தடத்துக்குள்
வாட்டத்துக்குண்டானேனடி,
அந்த நெய்தல் நிலத்து மீனாய்!

-------------------------------------------

ஒலிக்கதிர்களை
நெல் மணிகளாய்
கொத்தி கொத்தி
தின்னும் கிளிகள் 
பாடலின் மும்மரத்தில்
வயல்களை சிந்திவிடுகின்றன....
அவைகள் தின்று, பாடி, 
பறந்து போன வழியெல்லாம் !

ஈரமான உன் கடற்கரை குதியங்காலிலிருந்து 
குறுமணல்துகள்கள் சிதறிவிழுகையில் 
அந்த கிளிகள் பிறந்திருக்க வேண்டும்!

------------------------------------------------

"அன்னமே!" என்றவனை
அன்மையில் அழைத்து
ரகசியுமும் கவர் ரசாயனமும் கசியும்
குரலில்
"பாலில் இருந்து நீரை பிரிக்க தெரியாதே!!!"
என்றாய்.
"பிரித்தல் போன்ற வன்மமெல்லாம் 
உன் இயல்பிலில்லை,
வண்ணத்தில் உடுத்துபவளாய் அன்றி
வண்ணங்களை உடுத்துபவளானதால்...
நிறங்களையேல்லாம் இணைத்துருக்கி
வெண்மையை உடை போல
உடுத்துபவளானதால்...
நீ அன்னம்!"

---------------------------------------------------

குறுந்தகடில் பதிவிட்ட  பாடலடி 
உன் நினைவுகள்.
எத்தனை முறை கேட்டிருப்பேன்...
துளியும் துல்லியம் தேயலேயேடி!
அகண்டு உலர்ந்த பாலைவனத்தின் 
மேற்கூரையாய்...கருமேகம் எதற்கடி?
காலத்தின் இறுதி வரை முளையாமல்
மக்கிப்போவதே மேலடி.
கைதவறி எனை அழைத்தாயோடி?
மனம்தவறி எடுத்துத்தேனோடி?
இன்னும் காதில் ஒலிக்குதடி- நீ
பதறிப்பதறி துண்டித்த நொடி!
நடந்தது கடந்துபோகட்டும்- அடி
உயிரே உள்ளதை உரைத்துவிடாதே!!
விதையாய் மக்கிவிடுவது சுலபம்
விளைபயிராகி கருகிடவேண்டுவது 
என் தற்போதைய சபலம்!

---------------------------------------------------

நாளங்களில் 
துருவேறி கிடப்பவனில்
துருதுருப்பை பாய்ச்சவல்லது
குருகுருத்த பார்வையுடைய
உன்னிரு கிளி!

நாளங்களில்
நாண் ஏறி கிடப்பவளை 
வளைத்து நாண் பூட்டவல்லது 
நான் நினையாமல் நீ தரும்
தீன்முத்தம்! 

---------------------------------------------------

சேலைகளின் 
தலைப்பு செய்தி-அவள்
கொலுசுகளின் 
மணி மண்டபம்.
அவள் அடவாதங்களே* 
கடிகாரங்களின் முள்கிரீடம்!
-ஆறு

*அடவாதம்- பிடிவாதம் 

----------------------------------------------------

"கவனம்!
தேவதை நடமாட்டம்!"
என்னும் பலகையை
சாமத்தில் யாருக்கும் தெரியாமல்
உன் வீட்டு வாசலில் நட்டுவைத்த கைய்யோடு
தேடிகொண்டு இருக்கிறேன்...
"காதல் ஒரு மிகை
கடலை ஒரு தேய்வழக்கு"
என்று பினாத்திக் கொண்டு திரிந்த
அந்த மானஸ்த்தனை.
என்னுள்.
-----------------------------------------------------

சேர்த்தள்ளி நாடாவுக்குள் நீ முடிந்த
கட்டு மூங்கிலின் கயிர் அவிழ...
உருவி ஒற்றை மயிர் மூங்கில் நழுவிச்சரிந்த
விசைப் பாதையாய்...
ஆமாம்...அந்த விசைப்பாதையின்
தீட்டலாய்த்தான் உன் கீழுதட்டு வரி
எனதிந்த கவிதைக்குள் புகுந்திதை
ஓவியமாக்கிற்று!

------------------------------------------------------

ஊற்றுக்குழி மனதில்,
நித்தமும் ஊற்றெடுப்பது...
நீர்!

------------------------------------------------------
மூச்சில் அவிழ்ந்த கார் குழல்
மலைகள்தம்மில் மோதியும், 
பொழிவில்லை.
மேகத்திற்கு அது
பொலிவில்லை.
பலங்கொண்டு பற்றி இழு...
முகட்டின் விளிம்பில் 
பரிதவித்தது போதும்!
உதட்டின் விசும்பலின்
பெருங்குரல் தன்னின் 
முனைப்போடும், 
உதிரட்டும் மழைமல்லிச் சரம்.
உன் மூர்கத்தே சாவதும் வரம்!
-ஆறு

-ஆறு.

குழந்தைத்தனம்.


பறவையும் கூட உதரிவிட்ட
தீண்ட தகாத,
உடலிழந்த இறகொன்று
தரையோடு தவித்திருந்ததது.....

தினம் தினம் ஆயிரம் ஜோடி விழி பதியும்
எல்லா பொது இடத்திலும்
ஏதோவொரு காணப்படாத மூலையில்
எப்பொழுதும் அது காத்து கிடந்தது!

அந்த பக்கமாய் விளையாடித்திரியும்
குழந்தையின் சொதனை பொருளாயாகும் வரையில்
கிடயாய் கிடந்தது...தலை மேல் பறக்கும்
பறவைகள் பார்த்து ஏங்கி தேய்ந்தது!

ராமன் பதம் பட்ட பாறை போல,
குழந்தை கை தொட்டு, வாய் ஊதியதுமே
சாபம் தீர்ந்தது....
சிட்டாய் காற்றோடு பறந்தது.

எல்லாம் இனிதே முடிந்தததுதெனினும்.....
எங்கோ பறந்து போன இறகை கேட்டு அழும்
அந்த குழந்தைக்கு தான் என்ன சொல்லி புரியவைப்பது?
- மா.ஆறுமுக பிரதீப்.